புகழ்ச்சியும் நன்றியும் (#11387)

எல்லா மகிமைக்கும் மாட்சிமைக்கும் மேன்மைக்கும் மதிப்புக்கும் இறைமைக்கும் ஆட்சிக்கும் உயர்வுக்கும் அருளுக்கும் பேரச்சத்திற்கும் சக்திக்கும் மூலமாக விளங்கிடும் இறைவா, புகழனைத்தும் உமக்கே உரியதாகுக. நீர் விரும்பியவரை உமது அதிபெருங் கடலினை நெருங்கிடச் செய்வீர்; நீர் எவரை விரும்புகின்றீரோ அவருக்கு உமது அதி தொன்மையான நாமத்தினை அறிந்து ஏற்றுக் கொள்ளும் கௌரவத்தை அளிக்கின்றீர். விண்ணிலும் மண்ணிலுமுள்ள எவருமே உமது அரசாணையின் செயல்பாட்டினை எதிர்த்திட இயலாது. நித்திய காலத்திற்கும் படைப்பினம் முழுவதையுமே நீர் ஆண்டு வந்துள்ளீர்; இனி என்றும் எல்லாப் படைப்புப் பொருள்களின் மீதும் உமது ஆட்சியைத் தொடர்ந்து செலுத்தி வருவீர். சர்வ வல்லவரும் அதி மேன்மைமிக்கவரும் சர்வ சக்தி வாய்ந்தவரும் சர்வ விவேகியுமான இறைவன் உம்மையன்றி வேறிலர். 

பிரபுவே, உமது ஊழியர்களின் வதனங்களை ஒளிபெறச் செய்வீராக; அதனால் அவர்கள் உம்மைக் கண்ணுற இயலும்; அவர்களின் இதயங்களைத் தூய்மைப்படுத்துவீராக; அதனால் அவர்கள் உமது விண்ணுலகக் கடாட்சங்களின் அவையின்பால் திரும்பி உமது சொந்த மெய் நிலையின் அவதாரமும் உமது சாராம்சத்தின் பகலூற்றுமான அவரை ஏற்றுக் கொள்ளக் கூடும். மெய்யாகவே எல்லா உலகங்களின் பிரபுவும் நீரே; கட்டுப்படுத்தப்படாதவரும் சகலத்தையும் அடக்கவல்லவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

புகழ்ச்சியும் நன்றியும் (#11388)

அதி மேலான, கடவுளின் பெயரால்!  பிரபுவே, சர்வ சக்திமிக்கக் கடவுளே, நீர் போற்றிப் புகழப்படுவீராக; எவரது விவேகத்தின் முன், விவேகிகள் தம் திறனையிழந்தும்,  தவறியும் விடுகின்றனரோ; எவரது அறிவின் முன் கற்றோர் அவர்களின் அறியாமையை ஒப்புக்-கொள்கின்றனரோ; எவரது வலிமையின் முன் பலம்படைத்தோர் வலுவற்று நிற்கின்றனரோ; எவரது செல்வத்தின் முன் செல்வந்தர் அவர்களின் வறிய நிலையை ஒப்புக்கொள்கின்றனரோ; எவரது ஒளியின் முன், ஞானம் பெற்றோர் இருளில் காணாமல் போயுள்ளனரோ,  இழந்துள்ளனரோ; எவரது அறிவென்னும் புனிதாஸ்தலத்தை  நோக்கி எல்லாப் புரிந்துணர்வின் சாரமும் திரும்பி- யுள்ளனவோ; மற்றும் எவரது முன்னிலையின் சரணாலயத்தைச் சுற்றி மனுக்குலத்தின் எல்லா ஆன்மாக்களும் வலம் வந்துள்ளனவோ, அவர் நீரே ஆவீர்.

விவேகிகளின் விவேகமும், கற்றோரின் கற்றலும் புரிந்துகொள்ள தவறிய உமது சாராம்சத்தைப் பற்றி நான் எவ்வாறு பாடவோ, விவரிக்கவோ இயலும்; ஏனெனில், எந்த மனிதனும் தான் புரிந்துகொள்ளாத ஒன்றைப் பாடவும் இயலாது, அன்றியும் தான் அடைந்திட இயலாத ஒன்றைப் பற்றி விவரிக்கவும் இயலாது. ஆனால், நீரோ நித்திய காலம் முதல், அணுகமுடியாதவராகவும், தேடிட முடியாதவராகவும் இருந்துள்ளீர்.  உமது ஒளி எனும் சுவர்க்கங்களுக்கு நான் உயர்ந்திடவும், உமது  அறிவெனும் இராஜ்யங்களில் நான் உயரப் பறந்திடவும் சக்தியற்று இருந்தபோதிலும், நான் உமது  அடையாளங்களைக் குறித்தும், உமது  ஒளிமிக்கக் கைவண்ணங்களைக் குறித்தும் விவரித்திட இயலும்.

உந்தன் பேரொளியினால்!  எல்லா இதயங்களின் பேரன்பரே, உமக்காக ஏங்கிடும் வேதனையைத் தணியச் செய்யக்கூடிய தன்னந்தனியானவரே!  எதன் மூலமும், எதனைக் கொண்டும் நீர் உம்மை வெளிப்படுத்தியுள்ளீரோ, அந்த  அடையாளங்களுள் மிக அற்பமானவற்றைப் புகழ்வதற்கு விண்ணிலும் மண்ணிலும் வசிப்போர் அனைவரும் ஒன்றுசேர்ந்த போதிலும், அவ்வாறு செய்வதில் அவர்கள் தவறிடுவர்; உமது  சின்னங்கள் அனைத்தின் படைப்பாளரான உமது புனிதச் சொல்லினை அவர்கள் எங்ஙனம் போற்றிட இயலும்.

நீர்  ஒருவரே என்றும், உம்மைத் தவிர வேறு கடவுள் இலர் என்றும், நித்தியக் காலம் முதல் எல்லா சரியிணையானோருக்கும், ஒப்பானோருக்கும் மேலாக உயர்ந்தும், நித்திய காலமும் அவ்வாறே நிலைத்திருக்க விரும்புபவர் என எல்லாப் பொருள்களும் சாட்சியம் பகர்ந்துள்ள உமக்கே எல்லாப் புகழும், பெருமையும் சேரட்டுமாக.  மன்னர்கள் எல்லாரும் உமது ஊழியர்கள் ஆவர்; உருவமும், அருவமுமான அனைத்து ஜீவிகளும் உம்முன் ஒன்றுமில்லாமையாகும்.  கிருபை- யாளரும், சக்திமிக்கவரும், அதிவுயர்வான-வரான உம்மைத் தவிர, வேறு கடவுள் இலர்.

-Bahá'u'lláh
-----------------------

புகழ்ச்சியும் நன்றியும் (#11389)

பிரபுவே, எனதாண்டவரே, உமது நாமம் மேன்மைப்படுத்தப்படுமாக. சகல பொருள்-களாலும் பூஜிக்கப்படுபவரும் எந்த ஒருவரையும் வணங்காதவரும் நீரே! Êசகல பொருள்களின் பிரபுவும் அவரே: எவருக்குமே அடிமையாகாதவரும் அவரே; சகலத்தையும் அறிந்தவரும் எதனாலும் அறியப்படாதவரும் நீரே! மனிதர்பால் உம்மைத் தெரிவித்துக் கொள்ள நீர் விரும்பினீர்; ஆதலின், நீர் உமது திருவாயின் ஒரே சொல்லின் மூலமாகப் படைப்பினத்தைத் தோற்றுவித்துப் பிரபஞ்சத்- தினையும் உருவாக்கினீர். உருவாக்குபவரும், படைப்பவரும், எல்லாம் வல்லவரும், அதி சக்தி வாய்ந்தவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர். 

உமது விருப்பம் என்னும் தொடுவானத்திற்கு மேல் ஒளிர்ந்துள்ள இதே சொல்லின் வழி உமது தேர்ந்தெடுக்கப்பட்டோரின் இதயங்களை உயிரூட்டி, உம்மை நேசிப்போரின் ஆன்மாக்களைத் துடிப்புறச் செய்த ஜீவ நீரினைப் பருகிடுவதற்கு எனக்கு உதவுமாறு உம்மை வேண்டிக் கேட்கின்றேன். அதனால், எல்லாக் காலங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் என் முகத்தினை உந்தன்பால் திருப்பிடக் கூடும். 

சக்தியும் மகிமையும் வள்ளன்மையும் மிக்க இறைவன் நீரே. அதி உயரிய ஆட்சியாளரும் சர்வ மகிமை வாய்ந்தவரும் எல்லாமறிந்தவருமான இறைவன் உம்மையன்றி வேறிலர்.

-Bahá'u'lláh
-----------------------

புகழ்ச்சியும் நன்றியும் (#11390)

என் பிரபுவே, என் கடவுளே! நீர் மேன்மைப் படுத்தப்படுவீராக. உமது அவதாரமானவரை ஏற்றுக் கொள்ள எனக்கு உதவியமைக்காகவும் உமது பகைவர்களிடமிருந்து என்னை வேறாக்கியதற்காகவும் உமது நாள்களில் அவர்களின் தவறுகளையும் தீயச் செயல்களையும் எனது கண்களுக்கு முன்னால் காட்டியமைக்காகவும் அவர்களிடமிருந்து எல்லா தொடர்புகளையும் நீக்கியதற் காகவும் உமது கிருபை உமது வள்ளன்மைமிகு அருள்பாலிப்புகள் ஆகியவற்றின் மீது என்னை முழுமையாகத் திரும்பச் செய்தமைக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றேன். மேலும் உமது விருப்பம் என்னும் மேகங்களிலிருந்து என்மீது நீர் அனுப்பியருளியவற்றின் பயனாகச் சமய நம்பிக்கையற்றோரின் கூற்றுகளிலிருந்தும் தவறான நம்பிக்கைக் கொண்டோரின் மறைகுறிப்புகளிலிருந்தும் நான் புனிதப்படுத்தப்- பட்டிருந்ததன் காரணமாக உந்தன் மீது என் இதயத்தை உறுதியாகப் பதிக்கவும் உமது வதனத்தின் ஒளியினை மறுத்தவர்களிடமிருந்து என்னால் விலகி ஓட முடிந்தமைக்காகவும் நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். உமது அன்பில் நான் உறுதியாக இருந்திட எனக்குச் சக்தியளித்-தமைக்காகவும் உமது புகழை எடுத்துரைக்கவும் உமது பண்புகளைப் புகழ்ந்திடவும் கண்ணுக்குப் புலனாகும் புலனாகா அனைத்துப் பொருள்களையும் விஞ்சிடும் உமது கருணை என்னும் கோப்பையிலிருந்து என்னைப் பருகிடச் செய்தமைக்காகவும் மீண்டும் நான் உமக்கு நன்றி கூறுகின்றேன். 

எல்லாம் வல்லவரும், அதி மேன்மை மிக்கவரும், ஒளிமயமானவரும், அன்பே உருவானவரும் நீரே!

-Bahá'u'lláh
-----------------------

புகழ்ச்சியும் நன்றியும் (#11391)

எந்தன் இறைவா, எல்லா மாட்சிமையும் மகிமையும், எல்லா இராஜ்யமும், ஒளியும் கம்பீரமும் புகழொளியும் உமக்கே உரியதாகுக. நீர் தேர்ந்தெடுத்தவருக்கு இறைமையை வழங்கு-கின்றீர், நீர் விரும்பியவருக்கு அதனைக் கொடுக்க மறுக்கின்றீர். அனைத்தையும் உடைய, அதிவுயர்  இறைவன், உம்மையன்றி வேறிலர். பிரபஞ்சத்தையும் அதில் வாழும் அனைத்தையும் வெறுமையிலிருந்து படைப்பவர் நீரே. உமது மதிப்புக்கு உகந்தது உம்மை  அல்லாது வேறெதுவும் இல்லை; அதே வேளையில் உமது திருமுன்னிலையில் உம்மைத் தவிர மற்றனைத்தும் விலக்கப்பட்டன போன்றவையும், உமது சொந்த உருவின் மகிமையுடன் ஒப்பிடும்போது வெறுமையானவை போன்றவையாகும். 

“காட்சி எதுவுமே அவரை உள்ளடக்குவதில்லை; ஆனால், அவர், காட்சி அனைத்தையுமே உள்ளடக்குகின்றார்; நுட்பமானவரும் சகலத்தையும் கண்டுணர்பவரும் அவரே ஆவார்” என நீர் உமது முக்கிய நூலில் கூறுவதுபோல், உம்மையே நீர் புகழ்ந்துரைத்தாலல்லாது, யான் உமது பண்புகளைப் பாராட்டுதல் என்பது என் சக்திக்கு மிகவும் அப்பாற்பட்டதாகும். என் இறைவா, ஒளி உமக்கே உரியதாகுக; உண்மையில் எந்த ஒரு மனமோ, காட்சியோ, அது எத்துணை கூரியதாகவோ வேறுபாடு காணக் கூடியதாகவோ இருந்திடினும், உமது அடையாளங்களில் அதி அற்பமான ஒன்றின் தன்மையைக்கூட புரிந்துகொள்ளவியலாது. மெய்யாகவே, நீரே கடவுள், உம்மையன்றி இறைவன் வேறிலர். நீர் தனியராகவே உமது இயல்புகளின் வெளிப்படுத்துதலாவீர்; அதனால் உம்மைத் தவிர வேறெவரின் புகழ்ச்சியுமே உமது புனித அவைக்கு உயரவோ, உம்மைத் தவிர, வேறெவராலும் உமது இயல்புகளை ஆழங் கண்டிடவோ இயலாது என்பதற்கு, நான் சாட்சியம் கூறுகின்றேன். 

ஒளி உமக்கே உரியதாகட்டும். உம் ஒருவரின் வருணனையைத் தவிர வேறெவரின் வருணனைக்கும் மேலாக நீர் உயர்ந்திருக்கின்றீர் என்பதனால் உமது பண்புகளைப் பொருத்தமுற மிகைப்படுத்துவதோ, உமது அதி உள்ளார்ந்த மெய்ம்மையின் சாராம்சத்தினைப் புரிந்து கொள்வதோ மானிட கருத்துக்கு மிகவும் அப்பாற்பட்டதாகும். என் இறைவா, நீர் உம்மை என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டதன் காரணத்தினால்தான் நான் உம்மை அறிந்து கொண்டுள்ளேன்; நீர் உம்மை எனக்கு வெளிப்படுத்தியிருக்காவிடில், நான் உம்மை அறிந்திருக்கவே இயலாது. நீர் என்னை உந்தன்பால் அழைத்ததன் காரணமாகவே, நான் உம்மை வழிபடுகிறேன். உமது அழைப்பு இல்லாதிருந்திருப்பின் நான் உம்மை வழிபட்டிருக்கவே மாட்டேன்.

-The Báb
-----------------------

